இன்னும் சில..
என்ன தான்
செய்துகொண்டிருக்கிறேன்
யாரிடமாவது சென்று பேசியிருக்கலாம்
ஒருமுறையாவது அழுது புலம்பி இருக்கலாம்..
வாரி அணைத்துக் கொள்ள
எனக்கும் சில கைகள்
இருக்கத்தான் செய்திருக்கிறது..
என்ன ஒரு அலட்சியம்
அத்தனை கைகளையும்
நிராகரித்து விட எப்படி மனது வந்தது?!
யாருமே வேண்டாம் என்ற நிலைக்கு எல்லாம்
நான் ஒருபோதும் தள்ளப்படவில்லை
எனக்கு இந்த மனிதர்கள் தேவைதான்
அவர்களையும் எனக்கு பிடிக்கும்..
யாரையும் வெறுக்கும் அளவுக்கு சலிப்பை
இந்த வாழ்க்கை எனக்கு தந்ததே இல்லை
அவரவர் வாழ்வில் அவரவர் சங்கடங்களை
எதிர் கொண்டு தான் வாழ்கிறார்கள்
என்பது எனக்கு நன்றாக தெரியும்
பின் அதிர்வுகளின்றி சுதந்திரமாய்
நான் பிதற்ற
இந்த பயணங்களின் ஜன்னல்கள்
போதுமானதாக உள்ளது
போதாத பட்சத்தில் வானமோ ,
பூக்களோ , கடலோ ,காற்றோ.. போதும் தான்
ஏதுமற்ற சங்கடங்களை
தள்ளி வைக்க எனக்கும் கொஞ்சம்
தெரிந்திருக்கிறது..
யாரின் உதவியையும் நாடாமலே
வாழ்ந்துவிடுவேன் ..
இன்னும் கொஞ்ச காலம்
இன்னும் கொஞ்ச தூரம் ..
- உவா


கருத்துகள்
கருத்துரையிடுக