யாத்ரீகனின் பாதை~ ஒளிப்பட பயணக்கதைகள், வினோத் பாலுச்சாமி
வாழ்க்கையில் தூதுவர்கள் நம் அருகிலேயே, நம் கூடவே இருக்கிறார்கள். நாம் அவர்களைத் தூதுவர்கள் என நம்ப ஆரம்பிக்கும் கணம் வாழ்க்கை அழகாக விரிகிறது.
~ வினோத் பாலுச்சாமி
வாழ்வின் மீதான நம்பிக்கைகளை ஒவ்வொரு முறை இழக்கும் போதும், அப்படிக் கிடையாது என்பதை நிலைநிறுத்த சில மனிதர்கள் நம் வாழ்வினூடே வந்து செல்கிறார்கள். புத்தகங்களும் அப்படித் தான் நம்மை வந்தடைகிறது என உளமார நம்புகிறேன், வாழ்வின் மீதான நம்பிக்கைக் குறைந்து வரும்போதும், வாசிப்பு குறைந்து வரும்போதும் தான் வெறுமையும், சொல்ல முடியாத வலியும் புரிய வருகிறது.
முதன்முதலில் மனிதர்களைப் புகைப்படம் எடுத்த அனுபவத்தையும் அவர்களின் சிரிப்பையும் பற்றி மனோ அண்ணாவிடம் பேசியபோது ஒரு புத்தகம் எனக்காக அனுப்புவதாகச் சொன்னார். பெரும் வெறுமைக்கு உள்ளாகியிருந்த விடுதி அறையில் தான் இப்புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன், தொடங்கிய 20 பக்கத்தில் தான் புரிந்தது என்னால் இந்தப் புத்தகத்தை இந்த அறையில் இருந்தபடி படித்து முடிக்கவே முடியாதென்று, புத்தகம் என்று சொல்வதைவிட , ஒரு வாழ்வு. ஒரு வாழ்வினுடைய அனுபவங்களில் இருந்து தான் இன்னொரு வாழ்வை நாம் தொடங்குவதாய் நம்புகிறேன்.
ஒளியானது தன் வீட்டை வந்தடையும் ஒரு குளத்தின் அருகே யாத்ரீகனின் பாதையை நான் படித்து முடித்தேன். இது புத்தக விமர்சனம் என்பதைத் தாண்டி வாழ்வின் மீதான புகைப்படங்களின் மீதான மனிதர்களின் மீதான ஒளியின் மீதான இயற்கை மீதான நம்பிக்கையை மீட்டுத் தந்ததைப் பற்றிய அனுபவங்கள் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும்.
ஒரு கடற்கரையில் கடல் ஆமைகளைத் தேடி அலையும் சிறுவனாகவே வினோத் அண்ணாவை கற்பனைச் செய்து கொண்டேன். கடல் ஆமைகளைப் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் சிறுவனின் முகத்தில் எத்தனை பூரிப்பு, எத்தனை மன இன்பம் இருக்குமோ அதையே அவரின் எழுத்திலும் உணர முடிந்தது. மனிதர்கள் மீதான நம்பிக்கையில் மட்டுமே ஒவ்வொரு பயணங்களையும் மேற்கொள்கிறோம், ஆமைகளைப் பார்ப்பதற்காய் மேற்கொள்ளும் பயணத்தில் அவர் சென்று சேரும் இடங்களும், மனிதர்களும் வாழ்வை எப்படியும் வாழ முடியும் என்பதை உணர்த்தக்கூடியவர்கள். எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் நம்மிடம் அன்பு செய்யும் மனிதர்களைப் பயணங்கள் தான் பெற்றுத் தருகின்றன. அவையே என்றென்றுக்குமான வாழ்வின் ஒளியாக நம்முடன் பயணப்படுகின்றன. பயணப்படு! பயணங்கள் உனக்கு வழிகாட்டும், உன்னை அழைத்துச் செல்லும் நீ நலம் பெறுவாய் என்பதை ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும் போதும் அதில் உள்ள புகைப்படங்களைப் பார்க்கும் போதும் உணர்த்திய புத்தகம் தான் "யாத்ரீகனின் பாதை".🌻
02.03.2026

கருத்துகள்
கருத்துரையிடுக