என் கண்ணுக்கு நீ
இப்படி மங்கிக் கொண்டிருக்கும் பொழுதில்
எல்லாரும் அவரவர் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் யாருக்கும் நான் நினைவு கூட வந்திருக்க மாட்டேன்.
எதையோ நினைத்து கலங்கிய
என் விழிகளுக்கு தெளிவில்லாமல்
அசையும் ஒன்றாய் சற்று தூரத்தில்
நீ மட்டுமே புலப்பட்டாய் ,
நான் உன்னை வா என்று அழைக்கவில்லை தான்
ஆனால் அழைக்க நினைத்தது உண்மை
நீ என் விழிகளைப் பார்த்ததும் உண்மை !
சற்று முன்பு இந்த விழிகளில்
வழிந்தோடிய அத்தனை கண்ணீரும்
நீ வந்து துடைக்க வேண்டும் என்று
துளி கூட நினைத்தது கிடையாது .
நீ என்னை புறப்படு என்று சொல்ல வரவில்லை,
என் அருகே இப்படி அமர்ந்து கொண்டு
நான் நோக்கும் திசையை முடிந்தமட்டில் பார்ப்பதாய் தீர்மானம் செய்துள்ளாய் .
சரி , நான்
எதுவும் சொல்லப்போவதில்லை
நீயும் எதையும் எதிர்பார்க்க
மாட்டாய் என அறிவேன் .
நான் இன்னும் கொஞ்ச நேரம் மட்டும்
இங்க அமர்ந்து விட்டு
செல்வதாய் இருக்கிறேன் ,
இந்த இருள் எனை
ஒன்றும் செய்யாது தான்
இருப்பினும் கேட்கிறேன் ,
கட்டியான இந்த இருளை
கடக்க இன்று மட்டும்
உதவி செய்வாயா ' ?!
.
.
_உவா


கருத்துகள்
கருத்துரையிடுக